ஏப்ரல் மாதம் பெய்த பேய் மழையில் இருந்தே யுஏஇ மக்கள் இன்னும் முழுதுமாக மீண்டு வராத நிலையில் தற்போது மீண்டும் மழை துவங்கி உள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
கோடை காலம் துவங்க உள்ளதை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த சில நாட்களாக யுஏஇ முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மே மாதத்தின் முதல் சில நாட்கள் மட்டுமே யுஏஇ.,யில் மழை பெய்தது. அதற்கு பிறகு வறண்ட வானிலையே நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய துவங்கி உள்ளது.
இது குறித்து தேசிய வானிலை மையம் நிபுணர் டாக்டர். அகம்மது ஹபிப் கூறுகையில், மேகக் கூட்டங்கள் நிலவுவதால் ஜூன் 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுஏஇ.,யில் கிழக்கு மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். இந்திய வானிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக யுஏஇ.,யிலும் இந்த மாதத்தில் பெரும்பாலான பகுதிகளில் அதன் தாக்கம் இருக்கும். பெரும்பாலான பகுதிகள் மேக மூட்டத்துடனேயே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமனிலும் மழை துவங்க வாய்ப்புள்ளது. யுஏஇ.,யில் முழுவதுமாக மழை பெய்யும் என சொல்ல முடியாது. அதே சமயம் சில இடங்களில் மட்டுமே அதன் தாக்கம் இருக்கும். கடந்த சில நாட்களாக நாட்டின் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இனி வரும் நாட்களில் கோடை காலம் துவங்க உள்ளதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் ஹபிப் எச்சரித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, இந்த மாத இறுதி வரை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்