துபாய் : துபாயில் வசிப்பவர்கள் இனி டிராபிக்கில் சிக்கி, பல மணி நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி 10 நிமிடத்திலேயே தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பறந்து செல்ல முடியும். அதுவும் குறைந்த செலவில்.
துபாயில் இன்னம் சில ஆண்டுகளில் ஏர் டாக்சி அறிமுகம் செய்ய போகிறார்களாம். இதனால் துபாய்வாசிகள் டிராபிக்கில் சிக்காமல் பறந்து சென்று விடலாம். இதனால் அவர்களின் பயண நேரமும் 45 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறைய போகிறதாம். இதற்கான செலவு வெறும் 350 திர்ஹாம் தானாம். 2025ம் ஆண்டிற்குள் துபாயில் இந்த ஏர் டாக்சி பயன்பாட்டிற்கு வரும் என அமெரிக்க நிறுவனமான Joby தெரிவித்துள்ளது. வானத்தில் பறக்கும் இனிய அனுபவத்தையும் இதன் மூலம் மக்கள் பெற முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த ஏர் டாக்சியால் துபாய்வாசிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கான பயண நேரம் 70 சதவீதம் குறையும் என சொல்லப்படுகிறது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து Palm Jumeirah க்கு சாலை வழியாக 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் ஆகும் பயண நேரம் இனி 10 முதல் 12 நிமிடங்களாக குறைய உள்ளது. இந்த ஏர் டாக்சியில் பைலட் மற்றும் 4 பயணிகள் ஒரு நேரத்தில் பயணிக்க முடியுமாம். பொருட்களை வைப்பதற்கு தனியான இடமும் இந்த ஏர் டாக்சியில் உண்டாம்.
தரையில் இருந்து கிட்டதட்ட 1000 மீட்டர் உயரத்தில் இந்த ஏர் டாக்சி பறக்கக் கூடியதாம். இந்த ஏர் டாக்சியை ஓட்டுவதற்கு பைலட்களுக்கு தனியாக கமர்சியல் லைசன்ஸ் வழங்கப்பட்டு, 8 வாரங்ககள் பயிற்சியும் அளிக்கப்படுமாம். வெறும் ஆப் மூலமே பயணிகள் தங்களின் ஏர் டாக்சி பயணத்தை முன்பதிவு செய்து கொள்ள முடியுமாம். ஒரே ஒரு பயணி இருந்தால் கூட சரியான பயண நேரத்திற்கு ஏர் டாக்சி புறப்பட்டு செல்லுமாம்.
இந்த ஏர் டாக்சி மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் பறக்கக் கூடியதாம். 12 மோட்டார்கள், நான்கு பேட்டரிகள் பொருத்தப்பட்டு விமானமும், ஹெலிகாப்டரும் கலந்த ஒன்றாக இந்த ஏர் டாக்சி இருக்கும் என சொல்லப்படுகிறது.