யுஏஇ.,யில் ஏப்ரல் 16ம் தேதி பெய்த பேய் மழையில் ஏராளமான கார்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த கார்கள் தற்போது ஒன்றரை மாதத்திற்கு பிறகு மிக குறைந்த விலைக்கு சந்தையில் விற்பனைக்கு வர துவங்கி உள்ளன.
75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு யுஏஇ.,யில் பெய்த மழையில் ஆயிரக்கணக்கான கார்கள் சேதமடைந்தன. வெள்ளத்தில் பாதித்த கார்களால் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு நிவாரணம் கேட்டும், கேரேஜ்களில் பழுது பார்க்கவும் கார்கள் குவிந்து கிடக்கின்றன. வெள்ளத்தில் பாதித்த கார்களை சரி செய்வதற்கு 3 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும் என்ற நிலை தான் தற்போது வரை உள்ளது. அவ்வளவு நாட்கள் காத்திருந்தால் கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும் என்பதால் பலரும் இணையதளங்கள் உள்ளிட்டவைகள் மூலமாக கிடைத்த விலைக்கு காரை விற்பனை செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இது குறித்து கார் நிறுவனங்கள் கூறுகையில், வழக்கமாக நாங்கள் இரண்டு பிரிவுகளில் தான் கார்களை விற்பனை செய்வோம். ஒன்று 50,000 முதல் 80,000 திஹ்ரான் வரை, மற்றொன்று 150000 மற்றும் அதற்கு மேலான திஹ்ரான் மதிப்புடையவை என்பது தான். தற்போது மழை வெள்ளத்தால் பழுதடைந்த கார்களை விற்பவர்கள் மற்றும் குறைந்த விலைக்கு கிடைக்கும் கார்களை வாங்குபவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மூன்றாவதாக ஒரு பிரிவை தற்போது துவங்கி உள்ளோம். அதாவது 30,000 முதல் 50,000 திஹ்ரான்கள் வரையிலான கார் விலை பிரிவை துவங்கி உள்ளோம்.
இந்த மூன்றாவது பிரிவு என்பது இன்சூரன்ஸ் கம்பெனிகளால் நிராகரிக்கப்பட்டவைகளாகும். காரணம், வெள்ள நீர் இருந்த சாலையில் கார்களை இயக்கியது, வெள்ளநீர் புகுந்த கார்களை இயக்கியது ஆகிய காரணங்களக்காக இவைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த கார்களை தான் கிடைத்த விலைக்கு விற்று விட்டு, புதியவற்றை மாற்ற முடிவு செய்து பலரும் கார்களை விற்க முன் வந்துள்ளனர் என தெரிவிக்கின்றன. கொஞ்சம் பழைய மாடலாக இருந்தாலும், பாதுகாப்பான கார்களை மட்டுமே வாங்கும் படி வாடிக்கையாளர்களை கார் நிறவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்