யுஏஇ.,யில் ஏப்ரல் மாதம் பெய்த புயல், கனமழையின் பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் முழுவதுமாக மீண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் தற்போது அடர் பனிமூட்டமான காலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கவனமாக இருக்கும் படி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், மே 21ம் தேதி காலை முதல் அடர்ந்த பனிமூட்டம் நிலவும். இதனால் வெளிச்சம் குறைவாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் மிக கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து, வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் தங்களின் எலக்ட்ரானிக் தகவல் போர்டுகளில் வேகத்தின் அளவு தெரியும் வகையில் செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை நேரங்களில் பனிமூட்டமாக இருக்கும் என்றும், நேரம் செல்ல செல்ல தான் வெப்பநிலை உயர்ந்த பிறகே நிலைமை சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் 37 டிகிரி செல்சியசும், துபாயின் 35 டிகிரி செல்வசியசும் வெப்பநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர பகுதிகள் மற்றம் உள் மாவட்ட பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் வெளிச்சம் குறைந்து காணப்படும். மிதமான வேகத்தில் காற்று வீசக் கூடும், அரேபியன் வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல்சீற்றத்துடன் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த மழையின் பாதிப்பில் இருந்து மீண்டும் வருவதற்குள் தற்போது பனிமூட்டம் பாடாய்படுத்தி வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்