பிரதமர் நரேந்திர மோடி, குவைத் நாட்டின் அமீர் ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபாவின் அழைப்பை ஏற்று டிசம்பர் 21 மற்றும் 22, 2024 அன்று இரண்டு நாள் அரசுமுறை பயணமாக குவைத் சென்றார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் குவைத் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். 1981-ம் இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குவைத் சென்றார். அதன் பிறகு இப்பொழுது மோடி சென்றுள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நாட்கள் பயணமாக குவைத் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு மன்னர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே குவைத் நாட்டின் மிகவும் உயர்ந்த விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ விருது இப்போது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய ஆசிரியர்களும், இந்திய மருத்துவர்களும் குவைத் மக்களை வலிமைப்படுத்தி வருவதாக தெரிவித்தார். குவைத்தில் உள்ள தலைமை நிர்வாகிகளிடம் தான் பேசும்போது, அவர்கள் இந்தியர்களை பெரிதும் பாராட்டுவதாக பிரதமர் மோடி கூறினார்.
இதையடுத்து குவைத்தில் உள்ள கல்ஃப் ஸ்பிக் தொழிலாளர் முகாமுக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது அங்கு இருந்த இந்திய கட்டுமான தொழிலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். தாங்கள் 8 முதல் 10 மணி நேரம் வேலை பார்ப்பதாக தொழிலாளர்கள் மோடியிடம் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, தொழிலாளர்களின் கடின உழைப்பைப் பார்த்து அவர்களைவிட தாம் ஒரு மணி நேரம் அதிகம் வேலை செய்ய விரும்புவதாக பேசினார்.
உங்கள் குடும்பங்களுக்காக நீங்கள் உழைப்பதைப்போல, எனது குடும்பத்தில் உள்ள 140 கோடி மக்களுக்காகவும் தான் உழைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் குவைத் பயணம் இரு நாடுகளின் வர்த்தகம் முதலீடு மற்றும் எரிசக்தித் துறைகளில் புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது. குறிப்பாக, இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தும். மேலும், குவைத் சர்வதேச சூரிய சக்தி கூட்டணியில் இணைவதற்கான ஒப்பந்தம், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதற்கு உதவும்
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்